கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பமாக, எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. அப்போது முதலமைச்சர் பதவி யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. அந்த தேர்தலில் கட்சியை வழிநடத்திச் சென்ற டி.கே.சிவக்குமார் தான் முதலமைச்சராக பதவியேற்பார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, சித்தராமையாவுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கியது காங்கிரஸ் தலைமை.
மேலும், ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சர் பதவி என்ற ஒப்பந்தமும் செய்து கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்படி, சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நவம்பர் 20-ந் தேதியுடன் நிறைவடைந்தது. இதனால், கர்நாடக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் சித்தராமையா துணை முதலமைச்சர் சிவக்குமாருக்கு இன்று காலை விருந்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். இதில் இருவரும் சந்தித்துப் பேசிக் கொண்டனர். சந்திப்புக்குப் பிறகு டி.கே. சிவக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதலமைச்சர் சித்தராமையாவுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது என்றார்.
மேலும், டி.கே. சிவக்குமார் சமூக ஊடகப் பதிவில், “காவிரி இல்லத்தில் இன்று காலை காலை உணவு சந்திப்புக்காக முதல்வர் சித்தராமையாவை சந்தித்தேன். அப்போது மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஒரு பயனுள்ள விவாதம் நடைபெற்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது முதலமைச்சர் சித்தராமையா, “கட்சியின் தலைவர்கள் என்ன சொல்கிறார்களோ அதைப் பின்பற்ற முடிவு செய்துள்ளோம்” என்றார்.
மேலும், “எங்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. எதிர்காலத்தில் எந்த வேறுபாடுகளும் வராது. எங்களது திட்டம் எல்லாம் 2028 சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல் தான். அவற்றைப் பற்றி விவாதித்தோம். 2028 தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பது குறித்தும் விவாதித்தோம்” என்றும் சித்தராமையா கூறினார்.
முதலமைச்சர் பதவி விவகாரத்தில் “கட்சி தலைமை என்ன முடிவு எடுத்தாலும், நாங்கள் இருவரும் கீழ்ப்படிவோம். டி.கே. சிவக்குமாருக்கும் எனக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை” என்றும் அவர் கூறினார்.
மேலும், பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேவையற்ற கருத்துகளை கூறி வருவதாக குற்றம் சாட்டிய சித்தராமையா, “இரு கட்சிகளும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்போவதாக தெரிவித்துள்ளன. சட்டப் பேரவையில் பாஜகவுக்கு 60 எம்எல்ஏக்கள் மற்றும் குமாரசாமிக்கு 18 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அவர்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. சட்டப் பேரவையில் எங்களது பலம் 140. பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் எதிர்கொள்வோம்” என்று கூறினார்.
சில எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக விரும்புவதாகவும் வெளியான தகவல் உண்மை தான் என்றும் அதில் ஒன்றும் தவறு இல்லை என்றும் சித்தராமையா கூறினார்.
செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சிவக்குமார், “எங்களுக்குள் எந்த மோதலும் இல்லை. இப்போதும் கூட, நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம். முதல்வர் என்ன சொன்னாலும், நான் முதல்வருடன் இருக்கிறேன். நாங்கள் ஒன்றாக வேலை செய்கிறோம்” என்று கூறினார்.
“கர்நாடக மக்களுக்கு நாங்கள் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது எங்களது பொறுப்பு. 2028 சட்டமன்றத் தேர்தலுக்கான எங்கள் வியூகம் மற்றும் எதிர்க்கட்சிகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து இன்று விவாதித்தோம். எதிர்க்கட்சிகள் பல பிரச்சினைகளை எழுப்ப முயற்சிக்கலாம். அதனை எதிர் கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்” என்று துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறினார்.
