பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாட்டு தலைவர்களுக்கு இந்தியாவின் பாரம்பரிய கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கியது சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 15ம் தேதி தொடங்கிய ஐந்து நாள் ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் போது, பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்தபோது இந்தியாவின் பாரம்பரிய கலை, கைவினைப் பொருட்களை பரிசாக வழங்கியது உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சுவீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட இந்த பயணம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் வளமான கலாசார மரபுகளை உலக அரங்கில் மீண்டும் ஒளிரச் செய்துள்ளது.
நார்வேக்கு அளிக்கப்பட்ட பரிசுகள் சுற்றுப்பயணத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாகும். நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரேவை சந்தித்தபோது, சிக்கிமின் இயற்கை எழிலை பிரதிபலிக்கும் உலர்ந்த ஆர்க்கிட் மலர் ஓவியம் மற்றும் ஆர்க்கிட் வடிவிலான காகித எடைக்கற்களை மோடி பரிசளித்தார். கிழக்கு இமயமலையின் பல்லுயிர் வளத்தை எடுத்துக்காட்டும் இந்த பரிசுகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் இயற்கை பாரம்பரியத்தின் மீதான இந்தியாவின் அக்கறையை வெளிப்படுத்தின.
மேலும், நார்வே ராணி சோன் ஜாவுக்கு ஒடிசாவின் பாரம்பரிய பனை ஓலை பட்டாசித்திரத்தையும், பட்டத்து இளவரசர் ஹாக்கனுக்கு ஆந்திராவின் புகழ்பெற்ற கலம்காரி ஓவியத்தையும் அளித்தார். இந்த கலைப்படைப்புகள் இந்தியாவின் பல நூற்றாண்டு கால கைவினைத் திறனை சிறப்பாக பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நெதர்லாந்து தரப்பினருக்கு அளிக்கப்பட்ட பரிசுகளும் கண்ணைக் கவர்ந்தன. அந்நாட்டு மன்னர் வில்லெம் அலெக்ஸாண்டருக்கு ராஜஸ்தானின் பாரம்பரிய நீல மட்பாண்ட (ப்ளூ பாட்டரி) கலைப்பொருளை மோடி வழங்கினார்.
ராணி மாக்சிமாவுக்கு மீனாகரி மற்றும் குந்தன் நுட்பமான காதணிகளை பரிசாக அளித்தார். நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுக்கு பிகார் மாநிலத்தின் பிரசித்தி பெற்ற மதுபானி ஓவியம் வழங்கப்பட்டது. இந்த பரிசுகள் இந்தியாவின் பாரம்பரிய நகைக்கலை மற்றும் ஓவியக் கலையின் சிறப்பை உலகுக்கு எடுத்துரைத்தன. சுற்றுப்பயணத்தின் இறுதியில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்த மோடி, அஸ்ஸாமின் உயர்தர மூகா பட்டு சால்வையையும், மணிப்பூரின் அரிய ஷிருய் லில்லி பட்டு சால்வையையும் பரிசளித்தார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களின் தனித்துவமான பட்டு வகைகளை இவை பிரதிபலிக்கின்றன.
இந்த பரிசுப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் தனித்தன்மையான கலை, கலாசாரம் மற்றும் கைவினை மரபுகளை உலக தலைவர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளன. இது வெறும் பரிசு மட்டுமல்ல, இந்தியாவின் ‘மென்மையான சக்தி’ (Soft Power) அணுகுமுறையின் அழகிய வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது. பாரம்பரிய கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதோடு, கலாசார பரிமாற்றத்தை வலுப்படுத்தும் இந்த முயற்சி, உலக அரங்கில் இந்தியாவின் படிமத்தை மேலும் உயர்த்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணம், பொருளாதார ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பங்கீடு மற்றும் கலாசார உறவுகளை ஒருங்கிணைத்து, இந்தியாவின் உலகளாவிய தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
