அசாம், கேரளம், புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவையொட்டி அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 30 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
என். ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவியது. இதேபோல், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதன்முறையாக களம் இறங்கியதால் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர். இதில் குறிப்பாக புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வரலாற்றுச் சாதனையாக 89.83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது புதுச்சேரி தேர்தல் வரலாற்றில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 1964-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரு சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான மிக உயர்ந்த வாக்குப்பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்ததும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் பங்களிப்பும் இந்த அதீத வாக்குப்பதிவிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பிரச்சாரங்களும், அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றதும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல், அசாம் மாநிலத்திலும் வாக்குப்பதிவு சதவீதம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற தேர்தலில் அங்கு 85.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான 84.67 சதவீதத்தை விட அதிகமாகும். வடகிழக்கு மாநிலங்களில் ஜனநாயகத்தின் மீதான மக்களின் ஈடுபாடு அதிகரித்து வருவதை இப்புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன. புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய இரு மாநிலங்களிலும் பதிவான இந்த உயரிய வாக்குப்பதிவு, தேர்தல் முடிவுகளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

