ருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அவரது குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழகத்தில் 1996-2001-ம் ஆண்டு வரையிலான திமுக. ஆட்சியின் போது தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் அப்போதைய மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி.

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியே 31 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் சொத்து சேர்த்ததாக பெரியசாமி மீதும், அவரது மனைவி எபனேசர் அம்மாள், இவர்களது மகளும் அப்போதைய மாவட்ட ஊராட்சி தலைவரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன், அவரது கணவர் ஜீவன் ஜேக்கப், கீதா ஜீவனின் அண்ணன் ராஜா, தம்பியும் தற்போதைய மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தூத்துக்குடி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, கடந்த 2017-ம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக என்.பெரியசாமி மரணமடைந்தார். எனினும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்த  தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி குருமூர்த்தி, சொத்துக் குவிப்பு வழக்கில் போதிய முகாந்திரம் இல்லை எனக் கூறி, கீதாஜீவன், ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்து 2022 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து தொகுதி வாக்காளரான சண்முகசுந்தரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். 839 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த மறு ஆய்வு மனுவை, தாமதத்தை ஏற்று, விசாரணைக்கு பட்டியலிடக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், தாமதத்தை ஏற்கக் கோரி சண்முகசுந்தரம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version