ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையே நிலவி வரும் கடும் போர்ச் சூழலால், உலகளவில் எரிசக்தி விநியோகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை பகுதி வழியாகக் கப்பல்கள் செல்வதில் பெரும் சிக்கல் நீடிக்கிறது. இத்தகைய இக்கட்டான சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) துறைமுகத்திலிருந்து சுமார் 80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு ‘ஜக் லாட்கி’ என்ற இந்தியக் கப்பல் புறப்பட்டது.

https://x.com/ANI/status/2034174969136222710? 

ஃபுஜைரா துறைமுகத்தில் இந்தக் கப்பல் எண்ணெயை ஏற்றிக்கொண்டிருந்த போதே, அந்த முனையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக எந்தப் பாதிப்பும் இன்றி தப்பிய இந்தக் கப்பல், இந்தியக் கடற்படையின் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ (Operation Sankalp) பாதுகாப்பின் கீழ் அரபிக்கடல் வழியாகப் பயணித்தது. 274 மீட்டர் நீளம் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பல், இன்று (மார்ச் 18) குஜராத்தில் உள்ள அதானி குழுமத்தின் முந்த்ரா (Mundra) துறைமுக முனையத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது.

இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதில் இந்தச் சம்பவம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய எல்பிஜி (LPG) கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியா திரும்பிய நிலையில், ‘ஜக் லாட்கி’ கச்சா எண்ணெய் கப்பலின் வருகை இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version