தலைநகர் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் உள்ள பாலம் (Palam) மெட்ரோ ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று (மார்ச் 18) காலை 7 மணியளவில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளம் மற்றும் முதல் தளத்தில் துணிகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ குடியிருப்புப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது. அதிகாலை நேரம் என்பதால் மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இந்த விபத்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சுமார் மூன்று மணி நேரம் போராடித் தீயை அணைத்தன. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன; இதில் 3 பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். தீ விபத்தில் இருந்து தப்பிக்கக் கட்டிடத்தின் மேலிருந்து குதித்தவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தத் துயரச் சம்பவத்திற்கு டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பாலம் பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மீட்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தீயணைப்புத் துறையினர் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
