ஒவ்வொரு ஆண்டும் உலக அழகிகளை தேர்வு செய்வதற்கான போட்டி ஒவ்வொரு இடங்களில் நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டுக்கான 72-வது உலக அழகிப் போட்டி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது. 7-ம் தேதி தொடங்கிய இப்போட்டி வரும் 31-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாட்டில் புதிய மாநிலமாக தோன்றிய தெலுங்கானா கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக முன்னேறி வருகிறது. தற்போது உலக அழகி போட்டி நடைபெற உள்ளதால் உலக அளவில் தெலங்கானா, சுற்றுலா துறையுடன் இணைந்து இந்த போட்டிகளை மிஸ் வேர்ல்ட் அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கு முன்பு மும்பை மற்றும் டெல்லியில் உலக அழகி போட்டிகள் நடைபெற்றுள்ளது. 3-வது முறையாக இந்தியாவில் தெலங்கானாவில் இப்போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில் உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 140 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் ’மிஸ் இந்தியா நந்தினி குப்தா’ இப்போட்டியில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் தெலங்கானாவில் ‘யுனெஸ்கோ’வால் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட, முலுகு மாவட்டத்தில் பலம்பேட்டில் இருக்கும் ருத்ரேஸ்வரா எனப்படும் ராமப்பா கோயிலுக்கு இந்திய கலாச்சார உடையில் மிஸ் வேர்ல்ட் போட்டியாளர்கள் வருகை தந்தனர். அவர்களுக்கு கோயில் நுழைவாயிலில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்தோடு கோயிலுக்கு வருகை தந்த அழகிகளுக்கு அக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கால்களை கழுவி பாத பூஜை செய்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பேசுபொருளாக மாறியது.
மேலும் இந்திய செயலுக்கு தெலங்கானா எதிர்க்கட்சிகளான பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதற்கு விளக்கமளித்துள்ள தெலங்கானா காங்கிரஸ் அரசு, ‘விருந்தினர்களை கடவுளாக பாவிக்கும் கொள்கையின்படி, நாம் பின்பற்றும் பாரம்பரிய நடைமுறை தான் இது. இதன் வாயிலாக, நம் சர்வதேச விருந்தினர்களுக்கு மிக உயர்ந்த மரியாதையை வழங்கி இருக்கிறோம்’ என தெரிவித்துள்ளது.
