மும்பையில் வரலாறு காணாத கனமழையால், நகரம் முழுவதும் வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது.
மகாராஷ்டிராவில் முன் எப்போதும் இல்லாத அளவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு, பகலாக தொடர்ந்து மழை பெய்து கொண்டே வருகிறது. இதனால் வ்ர்த்தக நகரமான மும்பை வெள்ளக் காடாக காட்சியளிக்கிறது. பல்வேறு பகுதிகளில் 100 மில்லி மீட்டரை கடந்து மழை பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த 8 மணி நேரத்தில் மட்டும் 177 மிமீ மழை பதிவாகியிருக்கிறது. இது கடந்த 100 ஆண்டுகளில் மும்பையில் இல்லாத மழை அளவாகும். கனமழை எதிரொலியாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தாதர் நகரம், கிங் சர்கிள் மேம்பாலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில் மற்றும் விமான சேவைகளும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோல்ஹாபுர், புனே உள்ளிட்ட நகர்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்படுவதாக மும்பை மாநகராட்சி அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளித்துள்ளது.
கண்காணிப்பு, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் அவசியமின்றி வெளியே பயணிக்க வேண்டாம் எனவும், பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.