டெல்லி நீதிமன்றத்தில் விவாகரத்து பேப்பரை கிழித்தெறிந்துவிட்டு மீண்டும் கணவருடன் சேர்ந்த மனைவியின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளங்களில் வருகிறது.
ஷிகா சிங் என்ற பெண்ணுக்கும், சௌரப் என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக தம்பதியினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் காரணமாக, ஷிகா தன் கணவரைப் பிரிந்தார். மேலும், சௌரப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கொடுமை வழக்கையும் தொடர்ந்து, விவாகரத்துக்கும் விண்ணப்பித்திருந்தார்.
தன் மகளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என்று ஷிகாவின் தந்தை மனமுடைந்து போனார். நீதிமன்ற படிக்கட்டுகளில் ஏறி இறங்கி வழக்கை நடத்தியதில், அவரது உடல்நிலையும் பெரும் பாதிப்புக்குள்ளானது. ஒரு கட்டத்தில், கடுமையான பண நெருக்கடி மற்றும் மன உளைச்சல் காரணமாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. போதிய பண வசதி இல்லாததால், அவர் ஒரு அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
இந்த விஷயம் கணவர் சௌரப்பிற்கு தெரியவந்தது. பழைய பகையையோ, தன் மீது சுமத்தப்பட்ட பழியையோ அவர் ஒரு நிமிடம் கூட யோசிக்காமல் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்த சௌரப், தன் மாமனாரை அங்கிருந்து மீட்டு, குர்கானில் உள்ள புகழ்பெற்ற, அதிநவீன வசதிகள் கொண்ட மேதாந்தா மருத்துவமனையில் அனுமதித்தார்.
லட்சக்கணக்கில் செலவான போதிலும், தன் சொந்தப் பொறுப்பில் அனைத்து மருத்துவச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டார். சௌரப்பின் இந்த மனிதநேயமிக்க செயலால், ஷிகாவின் தந்தை மறுவாழ்வு பெற்று தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, டெல்லி நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து வழக்கின் அடுத்த விசாரணை நாள் வந்தது. நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைந்த ஷிகா, தன் தந்தையின் உயிரைக் காப்பாற்ற தன் கணவர் செய்த தியாகத்தையும், அவரது பெருந்தன்மையையும் நினைத்து உருகிப்போனார்.
https://x.com/rose_k01/status/2065110931932344792
நீதிமன்ற அறைக்குள் சென்ற ஷிகா, அனைவர் முன்னிலையிலும் தன் விவாகரத்து பத்திரங்கள் அனைத்தையும் கிழித்தெறிந்தார்! தன் கணவர் சௌரப்பை ஓடிச்சென்று கட்டித்தழுவி, கண்ணீருடன் தன் தவறுக்கு மன்னிப்புக் கேட்டார்.
அன்பும், இக்கட்டான நேரத்தில் காட்டிய மனிதநேயமும் ஒரு உடைந்த குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைத்துள்ளது. நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களும், மற்றவர்களும் இந்தத் தம்பதியின் செயலை கண்டு நெகிழ்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
