அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும், ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனமும் இணைந்து 2022-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்கலத்தை அனுப்பின. அதன் மூலம் உலகில் முதல் தனியார் விண்கலம் என்ற பெருமையை பெற்றது. அதனை தொடர்ந்து ஆக்சியம் 4 என்ற பெயரில் 4-வது விண்கலத்தை அனுப்ப திட்டமிடப்பட்டது.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலம் கடந்த 10-ம் தேதி ஏவப்பட இருந்தது. தொழில்நுட்பம், வானிலை காரணம் என 6 முறை இந்த திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. கடைசியாக, கடந்த 22-ந்தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் இந்த பயணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது என நாசா தெரிவித்தது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர் என்றும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்பட உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், இன்று வானிலை 90 சதவீதம் சாதகமான நிலையில் உள்ளதால் விண்வெளி பயணம் தடையின்றி மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்த நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்திய நேரத்தின்படி, இன்று மதியம் 12.01 மணிக்கு ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அது 28 மணி நேரத்தில் விண்வெளி நிலையம் சென்றடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றது. இதன்படி, நாளை மாலை 4.30 மணிக்கு விண்கலம் சென்றடைகிறது.
இந்நிலையில் விண்வெளிப் பயணம் துவக்கத்தின்போது “ஜெய்ஹிந்த்.. ஜெய்பாரத்..” என்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா முழங்கி, தனது தேச பக்தியை வெளிப்படுத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், “என் அன்பான நாட்டு மக்களே! என்ன ஒரு பயணம்.. 41 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விண்வெளியில் இருக்கிறோம். இது ஒரு அற்புதமான பயணம் வினாடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறோம். என் தோள்களில் பொறிக்கப்பட்ட திரங்கா, நான் உங்கள் அனைவருடனும் இருக்கிறேன் என்று சொல்கிறது. என்னுடைய இந்தப் பயணம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஒரு தொடக்கமல்ல, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்திற்கு ஒரு தொடக்கமாகும்.
இந்தப் பயணத்தில் நீங்கள் அனைவரும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நெஞ்சும் பெருமையால் பெருமிதம் கொள்ள வேண்டும்… ஒன்றாக, இந்தியாவின் மனித விண்வெளித் திட்டத்தைத் தொடங்குவோம். ஜெய் ஹிந்த்! ஜெய் பாரத் ” என்று கூறினார்.
கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற ரஷியாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த சுபான்ஷு சுக்லா, கடந்த 2006-ல் இந்திய விமானப்படையில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இந்த சூழ்நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷியாவின் யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.