அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் உள்ள ஸ்ரீவ்போர்ட் பகுதியில் அரங்கேறியுள்ள கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒட்டுமொத்த உலகையுமே உலுக்கியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் குடும்பத் தகராறு காரணமாக நிகழ்ந்த இந்த வன்முறையில், 14 வயதிற்கு உட்பட்ட 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 7 பேர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் சொந்தப் பிள்ளைகள் என்பதுதான் உச்சக்கட்ட சோகம்.
முதலில் ஒரு பெண்ணைத் தாக்கிய அந்த நபர், பின்னர் அடுத்தடுத்து இரண்டு வீடுகளுக்குச் சென்று அங்கிருந்த குழந்தைகளை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுள்ளார். இதில் ஒரு வயதுக் குழந்தை முதல் 12 வயது சிறுவர்கள் வரை ரத்த வெள்ளத்தில் பலியாகினர். ஒரு சிறுவன் தப்பிக்க முயன்று வீட்டின் கூரை மீது ஏறியபோது சுடப்பட்டு அங்கேயே சடலமாக மீட்கப்பட்ட காட்சி மீட்புப் பணியினரையே கண்கலங்கச் செய்துள்ளது.
இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட 31 வயதான ஷமார் எல்கின்ஸ் என்பவரைப் பிடிக்கக் காவல்துறையினர் முயன்றபோது, இருதரப்பிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இதில் அந்த நபரும் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் குழந்தைகளின் தாய் உள்ளிட்ட இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் இத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பது அந்நாட்டின் துப்பாக்கி கலாச்சாரம் குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
