ஈரான் நாட்டுக்கான இந்தியாவின் புதிய தூதராக அனுபவம் வாய்ந்த தூதரக அதிகாரியான விஸ்வேஷ் நேகி (Vishwesh Negi) நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி,. விஸ்வேஷ் நேகி 2002-ம் ஆண்டு இந்திய வெளியுறவுப் பணி (IFS) அதிகாரியாவார். இவர் தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் இணைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார். விரைவில் இவர் ஈரானின் தெஹ்ரான் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் தனது புதிய பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளியுறவு அமைச்சகத்திற்கு முன்பு, இவர் பாதுகாப்பு அமைச்சகத்தில் சர்வதேச கூட்டுறவுப் பிரிவின் இணைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மேலும், பல்வேறு நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களிலும் முக்கியப் பதவிகளை வகித்துள்ளார்.
தற்போதைய மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையில் இந்த நியத்துவம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஹோர்முஸ் ஜலசந்தி உள்ளிட்ட கடல்வழி வணிகப் பாதைகள் மற்றும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து ஈரான் தரப்பிடம் இந்தியா தொடர்ந்து தனது தீவிர கவலையைத் தெரிவித்து வருகிறது. மேலும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே இந்தியா எப்போதும் வலியுறுத்துகிறது.
முன்னதாக, வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். வணிகக் கப்பல்கள் மற்றும் பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் எந்தச் சூழ்நிலையிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று அவர் அப்போது வலியுறுத்தினார். எந்தத் தரப்பிலிருந்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களையும் இந்தியா வன்மையாகக் கண்டிப்பதாக அவர் தெரிவித்தார்.
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண மத்தியஸ்தர்கள் மூலமான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், ஈரானுடனான இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள் கூடுதல் கவனம் பெற்றுள்ளன.
