ஈரான், இஸ்ரேலுக்கு இடையிலான போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலால் அங்குள்ள இந்திய மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு, இருக்க இடம் இன்றியும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் இருக்கும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேல் மீதான போர் எதிரொலியாக ஈரான் தமது வான்வெளியை மூடி இருந்தது. தற்போது இந்தியாவின் கோரிக்கையை ஏற்று வான்வெளியை திறந்துள்ளது.

இந்த நிலையில், ஈரானில் இப்போதுள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு அங்குள்ள இந்திய மாணவர்களை வெளியேற்ற அங்குள்ள இந்திய தூதரகம் “ஆபரேஷன் சிந்து” என்ற பெயரில் நடவடிக்கை துவங்கி உள்ளது. இந்த ஆபரேஷன் மூலம் முதல்கட்டமாக 110 இந்திய மாணவர்கள் ஈரானில் இருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஈரானில் இருந்து சாலை மார்க்கமாக அர்மேனியா தலைநகர் எரவான் எல்லை அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி அழைத்து வரப்பட்டனர்.

இந்தநிலையில், ஈரானில் இருந்து அடுத்த கட்டமாக 1000 இந்திய மாணவர்கள் வெளியேற வான்வெளியை ஈரான் அரசு திறந்து விட்டுள்ளது. ஈரான் நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏர்வேஸ் 3 விமானங்கள் மூலம் இந்திய மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர். இவர்கள் அனைவரும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தாத நகரமான மஸ்சாத் வழியாக பாதுகாப்பாக அழைத்து வர ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. முதல் விமானத்தின் மூலம் மாணவர்களில் ஒரு பகுதியினர் தலைநகர் டில்லி அழைத்து வரப்படுவார்கள். எஞ்சியவர்களும் பகுதி, பகுதியாக அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version