உலக சுகாதார அமைப்பு, மலேரியாவால் பாதிக்கப்படும் பச்சிளம் குழந்தைகளின் உயிரைக் காக்க ‘Coartem Baby’ (Artemether-lumefantrine) எனப்படும் புதிய மருந்துக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2 முதல் 5 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய குழந்தைகளுக்கு மலேரியா சிகிச்சையை எளிதாக்கும் வகையில் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட முதல் மருந்து இதுவாகும்.
இதுவரை இத்தகைய சிறிய குழந்தைகளுக்கு முறையான மருந்துகள் இல்லாததால், பெரியவர்களுக்கான மருந்துகளைச் சிறிய அளவில் உடைத்துக் கொடுக்கும் நிலை இருந்தது; இது டோஸ் மாறுபாடுகள் மற்றும் பக்கவிளைவுகளுக்கு வழிவகுத்தது. தற்போது வந்துள்ள இந்த மருந்து இனிமையான செர்ரி சுவையுடனும், தாய்ப்பாலுடன் கலந்து எளிதாகக் கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளவில் மலேரியா பாதிப்பால் உயிரிழப்பவர்களில் சுமார் 75% பேர் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளே ஆவர். குறிப்பாக 2024-ம் ஆண்டில் மட்டும் சுமார் 6,10,000 பேர் மலேரியாவால் உயிரிழந்தனர், இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.
இத்தகைய சூழலில், நோவார்டிஸ் (Novartis) மற்றும் மலேரியா மெடிசின்ஸ் வென்ச்சர் (MMV) ஆகியவற்றின் கூட்டணியில் உருவான இந்த மருந்து, பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதத்தைக் குறைக்க உதவும் ஒரு முக்கியக் கருவியாகப் பார்க்கப்படுகிறது. வரும் காலங்களில் ஆப்பிரிக்கா போன்ற மலேரியா அதிகம் பாதிக்கும் பகுதிகளில் இந்த மருந்து குறைந்த விலையில் விநியோகிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
