தனது நாட்டின் அணு ஆயுத அந்தஸ்தை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று வடகொரியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஈரானைத் தொடர்ந்து அணு ஆயுத நடவடிக்கைகளை குறைக்குமாறு வடகொரியாவுக்கு சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன. தென்கொரியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து கடந்த 11ம் தேதி நடைபெற்ற அணுசக்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் அமெரிக்காவும், தென்கொரியாவும் வடகொரியாவுக்கு மீண்டும் வலியுறுத்தின. சர்வதேச அளவில் நிலவும் கடும் அழுத்தங்கள் மற்றும் தடைகளைத் தாண்டி, இந்த நிலைப்பாட்டில் வடகொரியா உறுதியாக இருப்பதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகிறது.
தற்காப்புக்காகவும், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் அணு ஆயுதங்கள் இன்றியமையாதவை என்பதால், இந்த அந்தஸ்தைத் தியாகம் செய்ய எந்தவித முகாந்திரமும் இல்லை என்று வடகொரியா வலியுறுத்தியுள்ளது. உலக நாடுகளின் கண்டனங்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் இருந்தாலும், தனது பாதுகாப்புத் திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை வடகொரியா மறைமுகமாகத் தெளிவுபடுத்தியுள்ளது.
அணு ஆயுத ஒழிப்பு என்பது தற்போதைய சூழலில் சாத்தியமற்றது என்றும், அணு ஆயுத நாடாகத் தொடர்ந்து செயல்படுவது தங்கள் நாட்டின் பாதுகாப்பு உத்தியின் அங்கம் என்றும் வடகொரியா கருதுகிறது. இந்த அறிவிப்பு, கொரிய தீபகற்பத்திலும் உலக அளவிலும் அரசியல் ரீதியாக மீண்டும் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வல்லரசு நாடுகளின் பேச்சுவார்த்தை அழைப்புகளைத் தொடர்ந்து வடகொரியா புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.
