இந்தியாவின் சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும், கண்டுபிடிப்புகளையும் பிரான்சில் காட்சிப்படுத்த தேர்வு செய்தது தங்களுக்கான மிகப்பெரிய கவுரவம் என்று அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரன் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கான ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸின் நீஸ் நகரைச் சென்றடைந்தார். அங்கு அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக, பிரான்ஸ் மற்றும் பிறநாடுகளை சேர்ந்த முன்னணி கண்டுபிடிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் மூலதன நிதியங்களையும் ஒன்றிணைக்கும் ‘பாரத் இன்னோவேட்ஸ்’ (Bharat Innovates) என்ற நிகழ்வை பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இந்தியாவின் மிகச்சிறந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் கண்டுபிடிப்பாளர்களையும் உலகிற்கு அறிமுகப்படுத்த, பிரான்ஸ் நாட்டை இந்தியா தேர்ந்தெடுத்தது தங்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
மேலும், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவின் நீண்டகால பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் மோடியின் உறுதியான தலைமைத்துவத்தையும், செயல்பாடுகளையும் அதிபர் மேக்ரான் வெகுவாகப் பாராட்டினார். இந்தியா ஏற்கனவே புதிய கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்குவதையும், உலக நாடுகள் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதையும் இந்த நிகழ்வு உறுதிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.
