பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் ‘ஆபரேஷன் கசாப் லில் ஹக்’ (Operation Ghazab lil-Haq) என்ற பெயரில் ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான் நிலைகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
காபூல், கந்தகார், பக்தியா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தாலிபான் ராணுவ முகாம்கள் மற்றும் வெடிபொருட்கள் சேமிப்பு கிடங்குகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்துள்ளன. சுமார் 133 தாலிபான் வீரர்கள் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
முன்னதாக ஆப்கான் படைகள் நடத்திய தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகத் தாலிபான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், பாகிஸ்தானின் சில எல்லைச் சாவடிகளைத் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், “எங்கள் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, இது ஒரு திறந்த போர்” என்று அறிவித்துள்ளார். இந்த மோதலுக்குப் பின்னால் நீண்ட கால வரலாறும், முக்கியப் புவிசார் அரசியல் காரணங்களும் உள்ளன.
பின்னணி: 1893-ல் பிரிட்டிஷ் அதிகாரியான சர் மார்டிமர் டியூரண்ட் மற்றும் ஆப்கான் அரசர் அப்துர் ரஹ்மான் கான் இடையே போடப்பட்ட ஒப்பந்தமே இந்தப் எல்லைக் கோடு. இந்த எல்லைக்கோடு பஷ்டூன் இன மக்கள் வாழும் பகுதியை இரண்டாகப் பிரிக்கிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள எந்தவொரு அரசும் (தற்போதைய தாலிபான் உட்பட) இந்த 2,640 கி.மீ நீளமுள்ள எல்லையை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. இது ஒரு “கற்பனைக் கோடு” என்பதே ஆப்கானிஸ்தானின் நிலைப்பாடு.
பாகிஸ்தான் தாலிபான் (TTP) அமைப்பினர் ஆப்கானிஸ்தான் மண்ணைப் புகலிடமாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆப்கான் தாலிபான்கள் தங்களது “சகோதர அமைப்பான” டிடிபி-க்கு ஆதரவு அளிப்பது பாகிஸ்தானுக்குப் பெரும் தலைவலியாக உள்ளது.
பாகிஸ்தான் தனது பாதுகாப்பிற்காக டியூரண்ட் கோடு நெடுகிலும் முள்வேலி அமைத்து வருகிறது. இதைத் தாலிபான்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். பல இடங்களில் தாலிபான் வீரர்கள் பாகிஸ்தான் அமைத்த வேலிகளைப் பிடுங்கி எறிந்துள்ளனர். பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தங்களது வசதிக்காக வரைந்த எல்லைகள், இன்று இரண்டு இஸ்லாமிய நாடுகளுக்கிடையே தீராத பகையை உருவாக்கியுள்ளன. பஷ்டூன் தேசியவாதம் இந்தப் போரின் அடிநாதமாக உள்ளது.
