பாலஸ்தீனம் தனி நாடாக அமைவதுதான், மத்திய கிழக்கில் நிலவும் பிரச்னைக்கு ஒரே தீர்வாக இருக்கும் என்று போப் லியோ தெரிவித்துள்ளார்.
துருக்கியில் இருந்து லெபனானுக்கு சுற்றுப்பயணம் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது:
பாலஸ்தீனம் தனி நாடாவதே பிரச்னைக்கு தீ்ர்வைத் தரும். இதை இஸ்ரேல் ஏற்காது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இஸ்ரேலுடன் நாங்கள் நட்புறவை வைத்துள்ளோம்.
இருப்பினும், அனைவருக்கும் நீதி கிடைக்கும் வகையில் பிரச்னைக்கு தீர்வைத் தர நாங்கள், இருதரப்பிற்கும் மத்தியஸ்தம் செய்ய தயாராக உள்ளோம்.
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், ரஷ்யா-உக்ரைன் போர் ஆகிய 2 விவகாரங்கள் குறித்தும் நானும் துருக்கி அதிபரும் பேசினோம். 2 மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர செய்யப்படும் உதவியில் துருக்கி முக்கிய பங்காற்றி வருகிறது.
இவ்வாறு போப் லியோ கூறினார்.
