ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய சுற்றுப்பயணத்தை உன்னிப்பாக கவனிப்போம் என்று ஜெர்மன் நாடு தெரிவித்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் வருகிற 4, 5-ம் தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார். ரஷ்யா- உக்ரைன்  இடையே சுமார் 3 ஆண்டுகளாக போர் நீடிக்கும் நிலையில், அவரது இந்த பயணம் சர்வதேச அளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

புதினின் இந்திய பயணம் குறித்து இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் கூறியிருப்பதாவது:

புதினின் இந்திய பயணத்தை மிகவும் உன்னிப்பாக கவனிப்போம். ஐரோப்பிய நாடுகளிடம் வைத்துள்ள உறவைக் காட்டிலும், ரஷ்யாவுடன் இந்தியா வேறு மாதிரியான உறவைக் கொண்டுள்ளது.

உக்ரைனுக்கு எதிராக போரைத் தொடங்கியதும், போரைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதும்  ரஷ்யாதான் என்பதை நாம் மறக்கக் கூடாது. இந்திய பிரதமர் மோடி, இது போருக்கான காலமில்லை எனத் தெரிவித்துள்ளார். இந்தப் போரில், போர் களத்தில் வெற்றி பெற முடியாது. புதின் இந்தியா வருகையில், அவரிடம் அமைதியை பிரதமர் மோடி வலியுறுத்துவார் என நம்புகிறோம்.

இவ்வாறு ஆக்கர்மேன் குறிப்பிட்டுள்ளார். 2021-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக புதின், இந்தியாவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version