கர்நாடக முதலமைச்சர் பதவித் தொடர்பாக கருத்து வேறுபாடு நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், திடீர் திருப்பமாக முதலமைச்சர் சித்தராமையாவை துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விருந்துக்கு அழைத்துள்ளார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே. சிவக்குமாரும் பதவியேற்றனர். அப்போது, காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டதன்பேரில் 2 பேரும் தலா இரண்டரை ஆண்டுகள் முதலமைச்சராக இருப்பது என முடிவு செய்து கொண்டதாக கூறப்பட்டது.
அதன்படி, சித்தராமைாயாவிடம் முதலமைச்சர் பதவியை டி.கே. சிவக்குமார் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் சித்தராமையா விட்டுக் கொடுக்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் 2 பேர் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டி.கே. சிவக்குமார் இன்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நானும், முதலமைச்சரும் ஒரே அணியாக இணைந்து செயல்படுவோம். அவரை நான் விருந்துக்கு அழைத்துள்ளேன்.
கர்நாடக மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கவும், 2 பேர் இடையேயான உறவை வலுப்படுத்தவும் விருந்துக்கு நான் அவரை அழைத்துள்ளேன்.
இவ்வாறு அந்தப் பதிவில் டி.கே. சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
