பிரதமர் மோடிக்கு ஓமனின் உயரிய ‘ஆர்டர் ஆப் ஓமன்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதலில், ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி, மன்னர் இரண்டாம் அப்துல்லா பின் அல் ஹுசைனை சந்தித்தார். இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர், எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் பிரதமர் அபி அகமது அலி உடனான சந்திப்பில், பொருளாதாரம், புதிய கண்டுபிடிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் கட்டமைப்பு
உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு பற்றி முக்கிய ஆலோசனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து எத்தியோப்பியாவின் ‘தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா’ என்ற உயரிய விருதை பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் அபி அகமது வழங்கி கவுரவித்தார்.

ஜோர்டான் மற்றும் எத்தியோப்பியா பயணத்தை முடித்துக் கொண்டு ஓமன் சென்ற பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.  இதையடுத்து, இந்தியா- ஓமன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி,  ‘ஆர்டர் ஆப் ஓமன்’ விருதை ஓமன் மன்னரும், பிரதமருமான சுல்தான் ஹைதம் பின் தாரிக் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார்.

இந்தநிலையில், ஜோர்டான், எத்தியோப்பியா மற்றும் ஓமன் ஆகிய 3 நாடுகளின் பயணங்களை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, டெல்லிக்கு புறப்பட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version