மத்திய கிழக்கில் போர்ச் சூழலுக்கு மத்தியில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானின் 2 டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது.
அணுசக்தி பயன்பாடு விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் தாக்குதலை தொடங்கியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதலை நடத்தியது. இந்தப் போரில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் தலைவர்கள் பலர் உயிரிழந்தனர். இருதரப்புக்கும் கடும் பாதிப்புகள் ஏற்பட்டது. இந்தநிலையில், அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டதையடுத்து, தற்காலிக போர் நிறுத்தம் நிலவி வருகிறது.
இந்தநிலையில், சர்வதேச கடல் வணிகத்திற்கு மிக முக்கியமான பாதையான ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இப்பகுதியில் சர்வதேச கடல் போக்குவரத்துக்கும், வணிகக் கப்பல்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாகக் கூறி, ஈரான் அனுப்பிய 2 டிரோன்களை அமெரிக்க ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
உலகின் 20 சதவீத எண்ணெய் விநியோகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்தத் தொடர் பதற்றம், சர்வதேச எரிசக்தி விலையிலும், விநியோகச் சங்கிலியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
