கனடாவில் பள்ளியில் நடத்தப்பட்ட அதிபயங்கர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 10 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் டம்ளர் ரிட்ஜ் நகரில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளியில் அதிபயங்கர துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 25 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் துப்பாக்கிச்சூடு நடந்தியதாக சந்தேகிக்கப்படும் பெண் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது,
மேலும் தாக்குதல் நடத்தப்பட்டது ஏன், யார் மீதான தாக்குதல் இது, இறந்தவர்கள் அனைவரும் மாணவர்களா என்பதை பற்றிய தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. காவல்துறையினரின் கூற்றுப்படி, பிப்ரவரி 10 ஆம் தேதி, பிற்பகல் 1:20 மணியளவில், டம்ளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்திய ஒருவர் குறித்து டம்ளர் ரிட்ஜ் ஆர்.சி.எம்.பி.க்கு தகவல் கிடைத்தது. காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர், மேலும் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
சந்தேக நபர் ஒருவர் இறந்து கிடந்ததாகவும், ஆரம்பத்தில் இது தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். இரண்டாவது சந்தேக நபர் இதில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர். சந்தேக நபரைத் தவிர, பள்ளிக்குள் மேலும் ஆறு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். காயமடைந்த இருவர் ஆபத்தான அல்லது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
“துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்து டம்ளர் ரிட்ஜ் பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும், கதவுகளை மூடியே இருக்க வேண்டும், தற்போதைக்கு வெளியே செல்லக்கூடாது. மற்ற அனைவரும் அப்பகுதியிலிருந்து விலகி காவல்துறையின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்” என்று போலீசார் தெரிவித்தனர்.
