காசாவை நிர்வகிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள அமைதி வாரியத்துக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி 2025 வரை இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் நடைபெற்று வந்தது.  இந்த போரில், இதுவரை 60,000 பேருக்கு அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட நிலையில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், காஸா அமைதி வாரியம்(board of peace gaza) என்ற அமைப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உருவாக்கினார்.

இந்த அமைப்பு, குறிப்பிட்ட காலத்திற்கு காசாவின் நிர்வாகத்தை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், காசாவில் இருந்து பாலஸ்தீன ராணுவம் முற்றிலுமாக வெளியேற வேண்டும், போரில் உருக்குலைந்துள்ள காஸாவை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும், ராணுவம் அல்லாத எந்த அமைப்பும் ஆயுதம் ஏந்தக் கூடாது; மீதமுள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட 20 விதிமுறைகளை காஸா அமைதி வாரியம் முன்மொழியப்பட்டது.

இந்த குழுவில், பிரித்தானிய முன்னாள் பிரதமர் டோனி பிளேயர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, மத்திய கிழக்கிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப், டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் உள்ளனர்.  மேலும், தனியார் பங்கு நிறுவனமான அப்பல்லோ குளோபல் மேனேஜ்மென்ட் CEO மார்க் ரோவன், உலக வங்கியின் தலைவரான அஜய் பங்கா, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இதில் அஜய் பங்கா இந்திய வம்சாவளி நபர் ஆவார்.

இந்தநிலையில், காசாவை நிர்வகிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள அமைதி வாரியத்துக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த குழுவை அறிவிக்கும் முன் அமெரிக்கா, தங்களிடம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் தங்கள் கொள்கைகளுக்கு இது எதிரானது எனவும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்குழுவில் துருக்கி அமைச்சர் இடம்பெற்றிருப்பதே எதிர்ப்புக்கு காரணம் என கூறப்படும் நிலையில், இஸ்ரேல் – அமரிக்கா உறவில் புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version