வெனிசுலா – அமெரிக்கா இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்து வரும் நிலையில் வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் அறிவித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

கரீபியன் கடல் வழியாக லத்தின் மற்றும் தென் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் அதிகளவில் போதைப்பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்படி கடத்தப்பட்டு வரும் போதைப் பொருட்கள் அனைத்தும் அமெரிக்காவுக்குள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், வெனிசுலா நாட்டில் இருந்து போதைப் பொருள் அதிகம் கடத்தப்படுவதாகவும் இதற்கு பின்னணியில் சீனா இருப்பதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

அதுமட்டுமின்றி, ஒருபக்கம் அமெரிக்காவுக்குள் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சர்வதேச கடல் எல்லையில் நீர்முழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தான், வெனிசுலா அரசை பயங்கரவாத அமைப்பு என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, ”தென் அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிகப்பெரிய கடற்படையால் வெனிசுலா முழுவதுமாகச் சூழப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இன்னும் தீவிரப்படுத்தப்படும். வெனிசுலாவுக்கு கொடுக்கப் போகும் அதிர்ச்சி, அவர்கள் இதற்கு முன் கண்டிராத ஒன்றாக இருக்கும். அமெரிக்காவிடம் இருந்து அவர்கள் திருடிய அனைத்து எண்ணெய், நிலம் மற்றும் பிற சொத்துக்களை திருப்பித் தரும் வரை இந்த நிலை தொடரும்.

சட்டவிரோதமான மடூரோ ஆட்சி, திருடப்பட்ட இந்த எண்ணெய் வயல்களில் இருந்து கிடைக்கும் எண்ணெயைப் பயன்படுத்தி தங்களுக்குத் தாங்களே நிதியளித்துக்கொள்வதுடன், போதைப்பொருள் பயங்கரவாதம், மனிதக் கடத்தல், கொலை மற்றும் ஆள்கடத்தல் போன்ற செயல்களுக்கும் நிதியளிக்கிறது. இதன்காரணமாக வெனிசுலா ஆட்சி ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வெனிசுலாவுக்கு உள்ளேயும், வெளியேவும் செல்லும் தடைசெய்யப்பட்ட அனைத்து எண்ணெய் டேங்கர் கப்பல்களையும் முற்றுகையிட இன்று உத்தரவிட்டுள்ளேன்.

பலவீனமான மற்றும் திறமையற்ற பைடன் நிர்வாகத்தின் போது மடூரோ ஆட்சி, அமெரிக்காவுக்கு அனுப்பிய சட்டவிரோத குடியேறிகளும் குற்றவாளிகளும் அதிவேகமாக வெனிசுலாவுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version