சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் 100% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனப் பொருட்கள் அமெரிக்க சந்தைகளில் நுழைய கனடா ஒரு வழித்தடமாக பயன்படுத்தப்பட அனுமதிக்கிறது என்ற டிரம்ப் நம்புவதால் இந்த முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரதமர் மார்க் கார்னி கனடாவை சீனாவுக்கான “ட்ராப்-ஆஃப் போர்ட்” (drop-off port) ஆக மாற்றினால், அது மிகப்பெரிய தவறு ஆகும் என்று டிரம்ப் வெளிப்படையாக எச்சரித்துள்ளார். ட்ருத் சோஷியல் தளத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளதாவது, இத்தகைய எந்த ஒப்பந்தமும் அமெரிக்காவுக்குள் நுழையும் அனைத்து கனடா பொருட்களுக்கும் கடும் சுங்கவரி விதிக்கப்படும் நிலையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பாக டிரம்ப்பிற்கும் கனடாவிற்கும் இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கிரீன்லாந்தில் முன்மொழியப்பட்ட “கோல்டன் டோம்” ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை நிராகரித்ததற்காக டிரம்ப் கனடாவை விமர்சித்துள்ளார். இந்தத் திட்டம் கனடாவைப் பாதுகாக்கும் என்று டிரம்ப் கூறுகிறார், ஆனால் கனடாவோ அமெரிக்கப் பாதுகாப்பில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சீனாவுடனான தனது உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் போது, கனடா பிரதமர் மார்க் கார்னி, பல தசாப்தங்களாக நீடித்து வந்த விதி அடிப்படையிலான உலக ஒழுங்கு மங்கிவரும் ஒரு காலகட்டத்தில் உலகம் இப்போது இருப்பதாக கார்னி கூறினார். தனது விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்கும் அமெரிக்காவின் கொள்கையை அவர் கடுமையாக விமர்சித்தார். நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் இப்போது ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமெரிக்கா கனடாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இருப்பதால், டொனால்ட் டிரம்பின் இந்த மிரட்டல் கனடாவின் பொருளாதாரத்திற்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. 100% வரி விதிக்கப்பட்டால், கனடாவின் ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்படும், மேலும் கனடிய நிறுவனங்கள் கணிசமான இழப்புகளைச் சந்திக்கும்.
