ரஷ்யாவின் மிகப்பெரிய ஆன்லைன் விற்பனை நிறுவனமான Wildberries-க்கு சொந்தமான இரண்டு கிடங்குகள் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன், 62 பேர் காயமடைந்துள்ளனர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 மாஸ்கோவிலிருந்து சுமார் 475 கி.மீ. தொலைவில் உள்ள டாம்போவ் நகரில் அமைந்துள்ள கிடங்கில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததுடன், 25 பேர் காயமடைந்தனர். மேலும், மாஸ்கோ பிராந்தியத்தின் எலெக்ட்ரோஸ்டால் நகரில் உள்ள மற்றொரு Wildberries கிடங்கில் ஒருவர் உயிரிழந்து, 37 பேர் காயமடைந்தனர்.

 இதுகுறித்து உக்ரைன் அதிபர் செலென்ஸ்கி வெளியிட்ட அறிக்கையில், தாக்குதலுக்குள்ளானவை ட்ரோன் உற்பத்திக்குத் தேவையான தடைக்குட்பட்ட உதிரிபாகங்கள் மற்றும் வழிகாட்டி உபகரணங்கள் சேமிக்கப்பட்டிருந்த முக்கிய தளவாட மையங்கள் எனக் கூறினார். மேலும், அசோவ் கடல், கருங்கடல் மற்றும் ரஷ்யா இணைத்துக் கொண்ட கிரிமியா பகுதிகளிலும் உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்தார்.

 இந்நிலையில், இந்த தாக்குதல் ரஷ்யா உக்ரைனின் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மற்றும் முக்கிய கட்டமைப்புகள் மீது தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாகவும் செலென்ஸ்கி கூறினார். இதற்கிடையில், ரஷ்யா நடத்திய இரவுநேர தாக்குதல்களில் உக்ரைனில் 14 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 2022-ஆம் ஆண்டு தொடங்கிய போருக்குப் பிறகு, ரஷ்யாவின் எரிசக்தி மற்றும் தளவாட கட்டமைப்புகளை குறிவைத்து உக்ரைன் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதாரமாக இருக்கும் எண்ணெய் மற்றும் எரிவாயு வசதிகள் சட்டபூர்வமான ராணுவ இலக்குகள் என உக்ரைன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version