முடியை பராமரிக்க பெரும்பாலான பெண்கள் பின்பற்றும் ஒரு வழி, இரவில் தலைக்கு எண்ணெய் வைத்து தூங்குவது. முடிப் பராமரிப்பு முறைகள் பல பரிணாமங்களைக் கண்டிருந்தாலும், இரவில் தூங்க செல்வதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவுவது (overnight hair oiling) இன்றும் நம்பகமான செயலாக பார்க்கப்படுகிறது. இந்த முறையைப் பின்பற்றுபவர்கள், இது முடிக்குப் போஷாக்கு அளிப்பதாகவும், வேர்களைப் பலப்படுத்துவதாகவும், முடியின் உதிர்வை (frizz) குறைப்பதாகவும், பளபளப்பை அதிகரிப்பதாகவும் கூறுகின்றனர்.

இதற்காக பலரும் பலவிதமான எண்ணெய்களை பயன்படுத்துகின்றனர். இருப்பினும், இரவு முழுவதும் தலைக்கு எண்ணெய் தடவி ஊறவைப்பது, முகப்பரு முதல் பொடுகு போன்ற பிரச்சனைகளை அதிகரிப்பதாக ஆய்வு கூறுகின்றது. அந்த வகையில், இரவு முழுவதும் தலைக்கு எண்ணெய் வைக்கலாமா? இப்படி செய்தால் உண்மையில் முடி வளர்ச்சி அதிகரிக்குமா? பக்க விளைவுகள் என்னென்ன? என்பதை பார்க்கலாம்.

எண்ணெய்களும் நன்மைகளும்!

தேங்காய் எண்ணெய் (Coconut oil): கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. இது முடியின் தண்டுக்குள் ஆழமாக ஊடுருவி, புரத இழப்பைக் குறைக்க உதவுகிறது.

ஆர்கன் எண்ணெய் (Argan oil): ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின் ‘ஈ’ நிறைந்தது. இது முடியை நீரேற்றமாக்கி மென்மையாக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய் (Olive oil): ஒலிக் அமிலம் கொண்டது. இது முடியின் எலாஸ்டிக் தன்மையையும் பளபளப்பையும் மேம்படுத்த உதவும்.

ஆமணக்கு எண்ணெய் (Castor oil): முடி வளர்ச்சியை மேம்படுத்தவும் அடர்த்தியாக்கவும் உதவும் ஆற்றலுக்காக அறியப்படுகிறது.

நன்மைகள்:

ஈரப்பதத்தைத் தக்க வைத்தல்: இரவு முழுவதும் தலையில் எண்ணெய் ஊற வைப்பது, முடியின் வேர் மற்றும் உச்சந்தலையில் ஊடுருவி, நீரேற்றம் மற்றும் ஊட்டச்சத்தை வழங்குகிறது. இது வறண்ட, சேதமடைந்த முடியைச் சரிசெய்து, உதிர்வைக் குறைத்து, உடைவதைத் தடுக்கிறது. காலப்போக்கில், தொடர்ந்து எண்ணெய் தடவுவது முடியின் இயற்கையான ஈரப்பதத்தைப் பராமரித்து, அதை மென்மையாகவும், மிருதுவாகவும், கையாள எளிதாக்குகிறது.

ரத்த ஓட்டம்: எண்ணெயுடன் உச்சந்தலையை மசாஜ் செய்வது ரத்த ஓட்டத்தைத் தூண்டி, ஆரோக்கியமான முடி நுண்குமிழ்களுக்கு (follicles) ஊக்கமளிக்கிறது மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். மேம்பட்ட ரத்த ஓட்டம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன் உச்சந்தலைக்கு சென்றடைவதை உறுதி செய்கிறது. இது வேர்களைப் பலப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முடி மெலிவதைக் குறைக்கவும் ஒட்டுமொத்த உச்சந்தலை ஆற்றலை (vitality) மேம்படுத்தவும் உதவுகிறது.

முடி அமைப்பு மற்றும் பளபளப்பு: இரவு முழுவதும் எண்ணெய் ஊற வைப்பது முடியின் மேலடுக்குகளை (cuticles) மென்மையாக்கி, ஈரப்பதத்தை உள்ளே சீல் செய்வதால், முடி அதிகப் பளபளப்பாகவும், கையாள எளிதாகவும் இருக்கும். இது சிக்கல் மற்றும் பிளவுபட்ட முனைகளைக் குறைத்து, முடியை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் முடி தொடுவதற்கு மென்மையாகவும், உதிர்வு குறைவாகவும், தினசரி தேய்மானம் மற்றும் சேதத்திற்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும் மாறும்.

உச்சந்தலை பராமரிப்பு: சில எண்ணெய்களில் நுண்ணுயிரிகளை எதிர்க்கும் மற்றும் இதமளிக்கும் பண்புகள் உள்ளன, அவை ஆரோக்கியமான உச்சந்தலையைப் பராமரிக்க உதவுகின்றன. இவை வறட்சி, செதில் செதிலாக உதிர்தல் மற்றும் எரிச்சலைக் குறைத்து, பொடுகு மற்றும் அரிப்பைப் போக்க உதவுகின்றன.

இரவு முழுவதும் முடியில் எண்ணெய் ஊறவைப்பதால் ஏற்படும் சிக்கல்கள்:

QuestJournals-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, இரவு முழுவதும் முடியில் எண்ணெயை ஊறவைப்பது, துளைகளை அடைத்தல், உச்சந்தலை எரிச்சல், புரதக் குவிப்பு (protein buildup), மற்றும் ஈரப்பதம் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும் என்கிறது. இது அரிப்பு, வீக்கம், முடி உடைதல், உதிர்வு அல்லது முடி உதிர்தலை கூட ஏற்படுத்தும் என்று வலியுறுத்துகிறது.

உச்சந்தலை எரிச்சலுக்கான வாய்ப்பு: நீண்ட நேரம் எண்ணெயை உச்சந்தலையில் வைத்திருப்பது சிலருக்கு எரிச்சல் அல்லது ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தலாம். உச்சந்தலை உணர்திறன் கொண்டதாக இருந்தால் அல்லது எண்ணெயில் ஒவ்வாமை ஏற்படுத்தும் பொருட்கள் இருந்தால் சிவப்பு, அரிப்பு அல்லது வீக்கம் ஏற்படலாம். பாதகமான எதிர்வினைகளைத் தவிர்க்க, எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு ‘பேட்ச் டெஸ்ட்’ செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

துளைகள் அடைப்பு மற்றும் முகப்பரு: இரவு முழுவதும் எண்ணெய் ஊற வைப்பது, குறிப்பாக எண்ணெய் பசையுள்ள அல்லது முகப்பரு ஏற்படும் சருமம் உள்ளவர்களுக்கு துளைகளை அடைக்கலாம். அதிகப்படியான எண்ணெய் வியர்வை மற்றும் அழுக்குடன் கலந்து, முகப்பரு ஏற்பட வழிவகுக்கும். காலப்போக்கில், இது முகப்பருவை மோசமாக்கலாம் அல்லது நெற்றியிலும் உச்சந்தலையிலும் சிறிய பருக்களை ஏற்படுத்தலாம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version