கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைக்கத் தொடங்கியுள்ள நிலையில், குளிர்ச்சிக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பலரும் பழைய சாதத்தை விரும்பிச் சாப்பிடத் தொடங்கியுள்ளனர். இரவு சமைத்த சாதத்தில் தண்ணீர் ஊற்றி, மறுநாள் காலையில் ஊறவைத்துச் சாப்பிடும் இந்த “பழையச்சோறு”, வெறும் உணவு மட்டுமல்ல; அது ஒரு சிறந்த இயற்கை மருந்தாகும். இதில் உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை வழங்கும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன. மேலும், சாதம் ஊறுவதால் ஏற்படும் நொதித்தல் (Fermentation) காரணமாக, இதில் உடலுக்கு நன்மை செய்யும் ‘புரோபயாடிக்’ பாக்டீரியாக்கள் பெருகி, நோய் எதிர்ப்பு சக்தியைப் பலப்படுத்துகின்றன.

மருத்துவ ரீதியாகப் பார்த்தால், பழைய சாதத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து செரிமான மண்டலத்தைச் சீராக வைக்க உதவுகிறது. குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் பலரையும் அவதிக்குள்ளாக்கும் வயிற்றுப்புண் (Ulcer), பெருங்குடல் அழற்சி மற்றும் குடல் எரிச்சல் போன்ற தீவிரமான பிரச்சினைகளுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இதுமட்டுமின்றி, உடலில் தேவையற்ற வாயு உற்பத்தியைத் தடுத்து அஜீரணக் கோளாறுகளை நீக்குகிறது. காலையில் வெறும் வயிற்றில் பழைய சாதத்தைச் சாப்பிடுவதன் மூலம் நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதை உணர முடியும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version