நாமக்கல்லில் விஜய் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் ரசிகர்களுக்கு 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி, நாகை மாவட்டங்களை தொடர்ந்து நமக்கல்லில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக செல்லும் அவருக்கு வழி நெடுக்கிலும் ரசிகர்களும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்த இருக்கும் நாமக்கல் – சேலம் சாலையில் உள்ள கே.எஸ்.தியேட்டர் எதிரே விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தில் காலை முதல் லட்சக்கணக்கான தொண்டர்கள் வந்த வண்ணம் இருந்தனர். விஜய்யின் இந்த பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்த போலீசார் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுக்கு 20 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
அதாவது தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும், பரப்புரையில் கலந்து கொள்ளும் எவரும் கையில் குச்சி, கம்பு போன்ற ஆயுதங்களை வைத்திருக்க கூடாது, பெண்கள் மற்றும் பெரியவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், வாகனத்தில் வரும் பொழுது வாகனத்தின் முன்பின் பக்கங்கள் மற்றும் மேற்கூரையில் ஏறிக்கொண்டு சக பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது.
பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தக் கூடாது, அவ்வாறு சேதம் ஏற்படுத்தினால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும், பயண வழிப்பாதை மற்றும் பரப்புரை நடக்கும் இடத்தில் பட்டாசுகள் வெடிக்க அனுமதி இல்லை, எளிதில் தீப்பெற்றக்கூடிய பொருட்கள் வைத்திருக்கக் கூடாது, பரப்புரை முடிந்தவுடன் தவெக தலைவர் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து செல்ல கூடாது, பரப்புரை இடத்திற்கு அருகில் உள்ள உயர் அழுத்த மின்சார கோபுரங்கள் மற்றும் உயர் கட்டிடங்கள் மீது ஏறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.