எம்.எல்.ஏ பதவியை தான் எதற்காக ராஜினாமா செய்தேன் என மதுராந்தகம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த மரகதம் குமரவேல் விளக்கம் அளித்துள்ளார்.

சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆதரவாக இருந்த மதுராந்தகம் தனித் தொகுதி எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார், தாராபுரம் தனித் தொகுதி எம்.எல்.ஏ சத்தியபாமா ஆகிய மூவரும் இன்று (மே 25) தலைமைச் செயலகத்தின் தரைத் தளத்தில் இருந்த சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகரை சந்தித்து தாங்கள் கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை அளித்தனர்.

அதை ஏற்றுக் கொண்டதாக சட்டப்பேரவைத் தலைவர் ஜேசிடி.பிரபாகர் தெரிவிப்பதற்கு முன்பாகவே, முதல் தளத்தில் இருக்கும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் அலுவலகத்துக்கு சென்று அவரை சந்தித்து மூவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு தவெக அடையாள அட்டை அளிக்கப்பட்டதோடு, ஆதவ் அர்ஜுனா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார். தலைமைச் செயலகம் தவெக அலுவலகமான நிலையில் அதன்பின்னரே, அவர்களின் ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

இதன்பின்னர், பனையூரில் அமைந்துள்ள தவெக தலைமை அலுவலகத்துக்கு வந்த அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மரகதம் குமரவேல் கூறியதாவது;-

“தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் நாங்கள் முழுமனதோடு கழகத்தில் இணைந்துள்ளோம். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் ஆகிய மூன்று தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்ற நாங்கள், எம்.எல்.ஏ பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளோம்.

எம்.எல்.ஏ பதவியில் இருந்து நாங்கள் ஏன் விலகியுள்ளோம் என்பதை மக்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறோம். தேர்தல் முடிவு கடந்த 4-ம் தேதி வெளியான நிலையில், மே 7ஆம் தேதி முதல் அதிமுகவில் பல்வேறு பிரச்சினைகள் தொடர்ந்தது. தலைமை குழு நிர்வாகிகள் கலந்தாலோசித்து இரு வேறு நிலைப்பாட்டை எடுத்தனர். அதில் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது. மற்றொன்று தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது.

இதில், திமுக உடன் இணைந்து ஆட்சி அமைப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லாததால், நாங்கள் எங்களது முடிவை முன்கூட்டியே எடுத்து விட்டோம்.

சி.வி.சண்முகம் தலைமையில் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த எங்களுக்கு அதிமுகவில் இருந்து விலகும் எண்ணமெல்லாம் இல்லை. தவெகவுக்கான ஆதரவு நிலைப்பாட்டை மட்டுமே எடுத்தோம். ஆனால், அன்று முதல், பல்வேறு அவதூறுகள், விமர்சனங்கள் எங்கள் மீது சமூக வலைதளத்தில் வைக்கப்பட்டது.

மேலும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக, எதிர்க்கட்சியான திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க எங்கள் மனம் விரும்பவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

கடந்த 2021 தேர்தலில் நாங்கள் எம்.எல்.ஏக்களாக வெற்றிபெற்றபோதும், மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை. 2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் தெரிவித்த மக்கள் எங்களை வெற்றி பெற வைத்தனர்.
ஆனாலும் எங்களால் எதிர்க்கட்சியாகக் கூட இந்த முறை செயல்பட முடியாத சூழலால்தான், தொகுதி மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். நிச்சயமாக இது சுய நலன் சார்ந்தது அல்ல. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் நல்லாட்சி கொடுப்பார் என நம்புகிறோம். தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தவெக தலைமை எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் என்றார்.,

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version