சேலம் நெடுஞ்சாலை நகர் அருகே உள்ள கிருஷ்ணா நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேலம் மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக கூட்டணி ஒற்றுமையாகவும் வலிமையாகவும் உள்ளது 2026 தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறும். திமுக கூட்டணியில் தான் முரண்பாடுகள் உள்ளதாக செய்திகள் வருகின்றன. உதயநிதி ஸ்டாலின் அதிமுக கூட்டணி குறித்து கருத்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர்களது கூட்டணியை அவர்கள் காப்பாற்றினால் போதும். திமுக கூட்டணியில் தான் பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அதனை அவர் சரி செய்தால் போதும்.
சேலம் மாநகராட்சி குறைபாடுகளை அதிமுக மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசும்போது திமுக பெண் உறுப்பினர் எழுந்து வந்து தாக்கியுள்ளார். காவல் துறையில் புகார் அளித்தால் அடிபட்டவர் மீதே வழக்கு பதிவு செய்கின்றனர். இது தான் ஸ்டாலின் மாடல் அராஜக ஆட்சி.
அதிமுகவின் எழுச்சி பயணத்தை ஊடகங்கள் இன்னும் மக்களிடம் கொண்டு சேர்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். ஏனென்றால், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்று ஒட்டுமொத்த மக்களும் முடிவெடுத்து விட்டனர். சுற்றுப்பயணத்தில் மக்களின் எழுச்சி மூலம் காண முடிகிறது. ஏனென்றால் திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த வித நன்மையும் கிடைக்கவில்லை. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது, ஊழல் மலிந்துவிட்டது.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் வேடிக்கையானது. அவர்கள் கொடுக்கும் விளம்பர தாளில் ஏராளமான குறைகளை குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் இவ்வளவு காலமாக அது நிறைவேற்றவில்லை என்பதுதான் அர்த்தம். அரசு அதிகாரிகளை பயன்படுத்தி அதில் மக்களின் செல் போன் எண்ணை குறிப்பிட சொல்கிறார்கள். அதை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் மக்களிடம் உரையாட பயன்படுத்துவா்கள். ஏற்கனவே சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு பெட்டி வைத்து மனு வாங்கினார்கள் அது என்ன ஆனது என்று தெரியவில்லை.
தேர்தல் நேரத்தில் அதிமுக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக அமையும். தேர்தலுக்கு இன்னும் 8 மாதம் உள்ளது. இன்னும் பல கட்சிகள் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. கனிமக் கொள்ளைகள் குறித்து அதிமுக சட்டமன்றத்தில் பேசி உள்ளது. தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுகிறது. அரசு அதில் கவனம் செலுத்தவில்லை. அரசு பகிரங்கமாக கொள்ளையடிப்பதை செய்து வருகிறது. ஊடகங்களில் வெளிச்சம் போட்டு காட்டினால் செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
அதிமுக ஆட்சி அமைந்த உடன் திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் ஊழல் நடந்துள்ளதோ அதையெல்லாம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.