குமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியார் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை முடித்து வைத்து மதுரை அமர்வு உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் தாஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் வன அலுவலர்களாக பணிபுரியும் ஆனந்த், ஷனவாஸ்கான், ஸ்ரீவள்சன் ஆகியோர், ” குமரி மாவட்டம், கடையல் வருவாய் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் சுமார் 4000 ரப்பர் மரங்களை வெட்ட அனுமதி வழங்கியுள்ளனர். ஆற்றுப் புறம்போக்கு பகுதியில் இருந்தும் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

மரங்களை வேரோடு சாய்க்க ஜேசிபி, ஹிட்டாச்சி உள்ளிட்ட கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது சுற்றுச்சூழல் சமநிலையை பாதிக்கும். தனியார் வனமாக அறிவிக்கப்பட்ட பகுதியாயினும், அது முறையாக பராமரிக்கப்பட வேண்டும். ஆனால் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள் தனி நபர்களை ரப்பர் மரங்களை வெட்ட அனுமதித்துள்ளனர். இது ஏற்கத்தக்கதல்ல.

ஆகவே கன்னியாகுமரி மாவட்ட பாதுகாக்கப்பட்ட தனியார் வன விதிகளை மீறும் வகையில் செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர்கள் மீது துறை ரீதியான மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட வேண்டும். அதோடு தமிழ்நாடு தனியார் வனங்கள் மற்றும் தனியார் வனங்கள் பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் அந்த நிலங்களில் இருந்து மரங்கள் கட்டுப்பாடின்றி வெட்டப்படுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், மரியகிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், “சம்பந்தப்பட்ட வன அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. இதனைப்பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version