அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மருது அழகுராஜுவுக்கு திமுக செய்தி தொடர்பாளர் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் முக்கிய பொறுப்புகளிலும், பேச்சாளராகவும் இருந்த மருது அழகுராஜ்க்கு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் பக்கம் இருந்தார். தொடர்ந்து அதிமுகவில் சலசலப்புக்கு இடையே அங்கும், இங்குமாக மாறிய மருது அழகுராஜ் அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார்.
தேர்தல் நெருங்கும் சூழலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் திமுக எம்பி, எம்.எல்.ஏ. களை சந்தித்து தேர்தல் பணிக்கு ஆயத்தம் ஆகும்படி பேசி வருகிறார். இந்த நிலையில், மருது அழகுராஜை எதிமுகவின் செய்தி தொடர்பாளர் துணை தலைவர் பொறுப்புக்கு நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதேபோல் மாவட்ட செயலாளார் பதவியில் இருந்து நீக்கப்பட்ட கோவை கார்த்திக்கு தீர்மானக் குழுச் செயலாளர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், ஊடக விவாதங்களில் கட்சியின் நிலைப்பாடுகளைத் தெளிவுபடுத்த, ஏற்கனவே உள்ள பேச்சாளர்களுடன் கூடுதலாக ஆறு பேச்சாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ப. தாயகம் கவி, மருது அழகுராஜ், பழ. செல்வகுமார், திருப்பத்தூர் ரஜினி, சைதை சாதிக், வழக்கறிஞர் துரை தமிழ்ச்செல்வன் ஆகியோர் தி.மு.க.வின் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருடன், இணைந்து பங்கு பெறுவார்கள் என கூறியுள்ளார்.
திமுகவில் இணைந்த உடனே அவருக்கு பொறுப்பு தந்திருப்பது கட்சிக்குள் பேசுபொருளாக மாறியுள்ளது.