பரபரப்பான அரசியல் சூழலில் டெல்லிக்கு சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிதாக பொறுப்பேற்றுள்ள துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ள சூழலில் அதிமுகவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்தார். அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
இதனால் அதிமுக கட்சிக்குள் விரிசலும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் இன்று திடீரென சென்னையில் இருந்து டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, புதிய துணை குடியரசு தலைவர் சிபி ராஷாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவருடன் அதிமுக மூத்த தலைவர்கள் கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி இடம்பெற்றிருந்தனர். இந்த சந்திப்பின் போது கொங்கு மண்டலத்தை சேர்ந்த தமிழரான ராஷாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக தேர்வானது தமிழ்நாட்டிற்கு பெருமை என எடபபடி பழனிசாமி கூறி இருந்தார்.
இந்த சந்திப்பை தொடர்ந்து இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே செங்கோட்டையன் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த நிலையில் தற்போது எடப்பாடியும் அவரை சந்திக்க இருப்பதால் தமிழக அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.