கடந்த 2023-ஆம் ஆண்டு கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளைத் தடுத்து நிறுத்தித் தாக்கிய வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் இன்று கரூர் விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி மகேஷ் முன்னிலையில் நேரில் ஆஜராகி உத்தரவாத ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.
கடந்த 2023 மே மாதம், கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். அப்போது, அங்கு திரண்ட திமுகவினர் மற்றும் ஆதரவாளர்கள் சோதனைக்கு இடையூறு விளைவித்து, அதிகாரிகளைத் தாக்கியதாகவும், சோதனை ஆவணங்களைச் சேதப்படுத்தியதாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்தச் சம்பவத்தில் பல திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்ட நிலையில், அசோக்குமார் பெயரும் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டது.
முன்ஜாமீன்
இந்த வழக்கில் கைது நடவடிக்கையைத் தவிர்க்க அசோக்குமார் நீதிமன்றத்தை நாடி வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் நிபந்தனையின்படி, ஜாமீன் நடைமுறைகளை நிறைவு செய்வதற்காகவும், உத்தரவாத (Surety) ஆவணங்களைச் சமர்ப்பிப்பதற்காகவும் அசோக்குமார் கரூர் விரைவு நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி மகேஷ், ஆவணங்களைப் பரிசீலித்து ஏற்றுக்கொண்டார். அசோக்குமார் ஆஜராக வந் த தால், கரூர் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
