தமிழகத்தில் நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனை இன்று தொடங்கிய நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தியின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தலை முன்னிட்டு தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் நடைபெற்றது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் சட்டப்பேரவை துணைச் செயலாளர் தேன்மொழி ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டன. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்களும் இந்த நடைமுறையில் கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றிக் கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடும் பிரவீன் சக்கரவர்த்தி தனது வேட்புமனுவை தேவையான ஆவணங்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் முன்மொழிவுகளுடன் தாக்கல் செய்திருந்தார். பரிசீலனையின் போது அவரது வேட்புமனு செல்லுபடியாக இருப்பதாக தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 15 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரவீன் சக்கரவர்த்தியைத் தவிர மற்ற அனைவரும் சுயேட்சை வேட்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சுயேட்சை வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மீதான ஆய்வும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு காங்கிரஸ் வேட்பாளருக்கு கிடைத்துள்ளதால், மேலும் வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் இல்லாத சூழலில் பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வாகும் வாய்ப்பு அதிகம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
வேட்புமனு திரும்பப் பெறும் காலக்கெடு முடிவடைந்த பிறகே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இருப்பினும் தற்போதைய நிலவரப்படி, மாநிலங்களவைக்கு காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி தேர்வாவது ஏறக்குறைய நிச்சயமாகி விட்டது.
