தமிழ்நாட்டை அயோத்தி உடன் இணைத்து பேசி, தனக்கு இன்னொரு முகம் இருப்பதை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டியுள்ளதாக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.

நெல்லை மாவட்ட சிலம்பக் கழகம் மற்றும் மேலப்பாளையம் சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், பாளையங்கோட்டை வ.உ.சி உள் விளையாட்டரங்கில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றன.

இதில், 5 முதல் 15 வயது வரையிலான மாணவர்களுக்கு தனித்தனியாக சிலம்பப் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு, வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் அப்பாவு பேசுகையில், “அயோத்தியை போல தமிழ்நாடு மாறுவதில் தவறு இல்லை என்று தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருக்கிறார். நயினார் நாகேந்திரன் அமைதியானவர் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், தனக்கு இன்னொரு முகம் இருப்பதை அவர் நேற்று காட்டியுள்ளார்” என விமர்சித்தார்.

பின்னர் திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக பேசிய அப்பாவு, “மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ ரயில் தேவை. அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுரையை கலவர பூமியாக மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமைதியாக உள்ள இடத்தில் தான் கலவரம் செய்ய முடியும். 50 பேருக்கு பயிற்சி கொடுத்துவிட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.

காந்தியை கொல்வதற்கு கோட்சேக்கு பயிற்சி கொடுத்தது போல; அயோத்தியில் கர சேவை என சொன்னதை போல; இங்கு திருப்பரங்குன்றத்தில் கலவரம் செய்ய நினைக்கிறார்கள். அறுபடை வீட்டில் ஒரு இடத்தில் மட்டும்தான் சிக்கந்தர் தர்கா உள்ளது. சிக்கந்தர் தர்கா இருப்பதால் சண்டையை உருவாக்க நினைக்கின்றனர். சட்டத்தின் ஆட்சி முதலமைச்சரால் நடத்தப்பட்டு வருகிறது. எந்த சலசலப்பிற்கும் தமிழ்நாடு அரசு அஞ்சாது. அவர்கள் நினைப்பது தமிழ்நாட்டில் நடக்காது” என்றார் அவர்.

யு.ஜி.சி-க்கு அதிகாரம் கிடையாது

உயர்கல்வி நிறுவனங்களில் மும்மொழி கொள்கையை அமல்படுத்த வேண்டும் என யுஜிசி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “இதை சொல்ல யுஜிசி-க்கு அதிகாரம் கிடையாது. பல்கலைக்கழகங்களுக்கு ஆலோசனை மட்டுமே யு.ஜி.சி வழங்க முடியும். அதனை ஏற்பதும்; ஏற்காமல் இருப்பதும் மாநில அரசின் உரிமை.

ஒடிசாவில் நடந்த ஒரு வழக்கில் யுஜிசி பல்கலைக்கழங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் அதிகாரம் கிடையாது என தெளிவாக சொல்லிவிட்டது. பல்கலைக்கழகத்திற்கு மானியம் கொடுப்பதுதான் அவர்களது பணி.

மத்திய அரசின் ஏவல்துறையாக சி.பி.ஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்றவை இருக்கும் நிலையில், இப்போது தேர்தல் ஆணையமும், யு.ஜி.சி-யும் அந்த பட்டியலில் சேர்ந்துவிட்டது . புனிதமாக உள்ள நீதிமன்றத்தையும் மத்திய அரசின் ஏவல்துறையாக மாற்றி விடுவார்களோ என அச்சம் வந்துவிட்டது” என்று அப்பாவு தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version