தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் பரவிய நிலையில் செங்கோட்டையன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளித்தார். இந்நிலையில், விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரிய இடம் போதுமானதாக இல்லை என காவல்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், ” தவெக தலைவர் விஜய் வரும் 16ஆம் தேதி ஈரோடு வரவுள்ளார். இந்நிலையில் பொதுக்கூட்டம் நடத்த வாரி மஹால் அருகாமையில் இடத்தின் சர்வே எண் குறிப்பிட்டு அனுமதி கேட்டு கடிதம் வழங்கினோம். ஆனால், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதற்கான எழுத்துப்பூர்வமான கடிதங்கள் எதுவும் காவல்துறை எங்களிடம் வழங்கவில்லை.
அதுகுறித்து காவல்துறையிடம் கேட்டதற்கு, அனுமதி மறுப்பு என்று நாங்கள் எந்த தகவலும் கொடுக்கவில்லை. அப்படி மறுக்கப்பட்டால் உங்களுக்கு தான் முதலில் தெரிவிப்போம் என தெரிவித்தனர். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாற்று இடத்தையும் தேர்வு செய்துள்ளோம். பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே 16 ஏக்கர் பரப்பளவில் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு இடத்தை தேர்வு செய்து கோரிக்கை கடிதம் கொடுத்திருக்கிறோம். எச்சரிக்கையாக ஒரு மாற்று இடத்தை தர வேண்டும் என்பதற்காக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த பொதுக்கூட்டம் இந்த பகுதியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் விஜயின் சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கு பிறகு நடக்கவுள்ளது. ஒரு எழுச்சி பயணமாக இந்த ஈரோடு பயணம் அமையும். தற்போது பவளத்தாம்பாளையம், விஜயமங்கலம் சுங்கச்சாவடி என இரு இடங்களில் எந்த இடம் என்பது இதுவரை முடிவாகவில்லை. பொதுக்கூட்டத்திற்கு கட்சி சார்பில் 10,000 பேரும், பொதுமக்களும் வருகை தர இருப்பதால், அன்றைக்கு தான் கூட்டம் குறித்த நிலவரம் தெரியும். மாற்று இடத்தை தேர்வு செய்யக்கோரி காவல்துறை எங்களுக்கு இதுவரை அறிவுறுத்தவில்லை, எச்சரிக்கையாகத்தான் மாற்று இடத்தை தேர்வு செய்து வருகிறோம். பொதுக்கூட்டத்திற்கு ஒரு நாளுக்கு முன்பு விஜய் புறப்படும் நேரம், அவர் இங்கு வரும் நேரம் தெளிவாக தெரிவிக்கப்படும்.” என்றார்.
கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என கூறப்படுகிறேதே என்ற கேள்விக்கு, ” அதை நீங்கள் தான் சொல்கிறீர்கள்.. ஆனால் யாருடைய கோட்டை என்பதை நாளை பார்ப்பீர்கள்.” என்றார்.
ஜெயலலிதாவின் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது போல, விஜயின் சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வீர்களா? என கேள்விக்கு, ” முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயணத்தின் போது ரோடு ஷோ நடைபெற்றது, இப்போது ரோடு ஷோ தவிர்க்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் இரண்டு, மூன்று இடங்களில் போட்டோம். இப்போது ஒவ்வொரு மாவட்ட வாரியாக நடத்த வேண்டிய சூழல் இருக்கிறது.” என தெரிவித்தார்.
