தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

 தமிழகத்தில் கல்வி, மொழி, மாநில உரிமைகள் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த முக்கியமான அடிப்படை உரிமைகள் ஆகும். இந்நிலையில், ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள பி.எம். ஸ்ரீ (PM SHRI)  திட்டத்தின் கீழ் முன்வைக்கப்படும் கல்வி மாற்றங்களில் வெளிப்படையாகக் காணப்படாத சில ஆழமானப் பாதிப்புகள் உள்ளன. குறிப்பாக, மும்மொழிக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய கல்வி நடைமுறைகள், வருங்காலத்தில் இந்தி திணிப்பிற்கு வழிவகுக்கும் அபாயத்தை உருவாக்குகின்றன.

 தமிழ்நாடு பல தசாப்தங்களாகப் பின்பற்றிவரும் இருமொழிக் கொள்கை (தமிழ் + ஆங்கிலம்) என்பது மொழி அடையாளத்தையும், கல்வி சமத்துவத்தையும் பாதுகாக்கும் முக்கியக் கொள்கையாகும். இதற்கு முரணாக மும்மொழிக் கொள்கையை திணிப்பது, தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் வரலாற்றுப் போராட்டங்களுக்கும் எதிரானதாகும்.

 மேலும், கல்வி என்பது அரசியலமைப்பின் அடிப்படையில் மாநிலங்களின் உரிமை சார்ந்த துறை ஆகும். மாநிலங்களின் தேவைகள், மொழி, சமூக அமைப்பு, பொருளாதார நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு கல்விக் கொள்கைகள் வடிவமைக்கப்பட வேண்டும். ஆனால், ஒன்றிய அரசு விதிக்கும் ஒரே மாதிரியான கல்விக் கட்டுப்பாடுகள், மாநிலங்களின் சுயாட்சியைக் குறைக்கும் முயற்சியாகவே பார்க்கப்படுகின்றன.

அதனால், கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வலியுறுத்தலாகும்.

தமிழ்நாட்டில் புதிதாக அமைய உள்ள அரசு இதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும், தமிழகத்தின் உரிமைகளைக் காக்கும் விதமாக,அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மிகப்பெரிய அளவில் வலுவானப் போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும் ஓரணியில் திரண்டு முன்னெடுக்க வேண்டும் என்றும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version