காங்கிரசை சேர்க்காமல் தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் தவெக ஆட்சி அமைத்திருக்கலாம் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடியது. இதையடுத்து, ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை தவெக தலைவர் விஜய் மே 6ஆம் தேதி சந்தித்து உரிமை கோரினார்.
அப்போது, பெரும்பான்மைக்கான 118 எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை வழங்குமாறு ஆளுநர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது. காங்கிரஸ் தரப்பில் 5 எம்.எல்.ஏக்களின் ஆதரவு அளிக்கப்பட்டதைத் தொடர்து மே 7ஆம் தேதி காலை மீண்டும் தவெக தலைவர் விஜய் ஆளுநரைச் சந்தித்தார். இதன் பிறகு, ஆளுநர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் அரசை அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை ஆதரவை கட்சி பெறவில்லை என்று விஜய்யிடம் ஆளுநர் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், “தவெக முதலில் 107 இடங்களுடன் ஆளுநரை அணுகியிருந்தால், ஆளுநர் அவர்களை ஆட்சி அமைத்து சட்டப்பேரவையில் தங்கள் பலத்தை நிரூபிக்குமாறு கூறியிருப்பார். ஆனால், தவெக தங்களோடு வேறு ஒரு கட்சியைச் சேர்த்துக்கொண்டதால் இடங்களின் எண்ணிக்கை 112 ஆகிறது. அதனால், அவர்களுக்குப் பெரும்பான்மை இல்லை என்று ஆளுநர் நிச்சயமாகச் சொல்வார். அரசாங்கம் தனிப்பெரும்பான்மைக்காகக் காத்திருக்கும்” எனத் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி தான் முதலில் தவெகவுக்கு ஆதரவு அளித்தது. திமுக கூட்டணியை உடைத்துவிட்டு காங்கிரஸ் வெளியேறியதால் உள்ள அதிருப்தியால்தான் டி.கே.எஸ்.இளன்கோவன் இப்படி கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறத்.
