பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் வகையில் தனி அரசியல் இயக்கத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
“அதிக மக்களை இணைக்கும் புதிய அரசியல் தேவை” என்று கூறியுள்ள அவர், அடுத்த தேர்தலிலேயே தனது புதிய கட்சி களமிறங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் முன்னாள் தமிழகத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து தனது எதிர்கால அரசியல் திட்டங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“என்னுடைய பாதை வேறு. நிறைய மக்களை இணைத்து, அடிப்படை கட்டமைப்புகளை மாற்றக்கூடிய புதிய அரசியலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள காணொளியில் பேசிய அண்ணாமலை, 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி பாஜகவில் இணைந்து சுமார் ஆறு ஆண்டுகள் தமிழக மக்களுக்காக பணியாற்றியதை தனது அரசியல் வாழ்க்கையின் முக்கியமான காலமாகக் குறிப்பிட்டார். அதேநேரத்தில், தனது அரசியல் இலக்குகள் மேலும் விரிவானவை என்றும், புதிய அரசியல் பரிமாணத்தை உருவாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் கூறினார்.
“ஒரு புதிய இயக்கம், புதிய சிந்தனை மற்றும் புதிய அணுகுமுறையுடன் செயல்படும் அரசியல் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என் மிகப்பெரிய ஆசை. எல்லோரையும் இணைக்கும் அரசியலை முன்னெடுக்க விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

புதிய அரசியல் இயக்கம் ‘We The Leader’* என்ற பெயரில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. “மாறுவோம், மாற்றுவோம்” என்ற முழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, சாதாரண மக்களின் பிரச்சினைகளை மையப்படுத்திய அரசியலை முன்னெடுக்க இருப்பதாக அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், தமிழகத்தை நாட்டின் முன்னணி மாநிலமாக மாற்றுவதே தனது அரசியல் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை தனது அரசியல் பயணத்தையும் நினைவுகூர்ந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் அரசியலுக்குள் நுழைவது எளிதானது அல்ல என்றும், பல சவால்களைத் தாண்டியே இந்த நிலையை அடைந்துள்ளதாகவும் கூறினார். 2009-ஆம் ஆண்டு தேமுதிகவில் குறுகிய காலம் இருந்ததையும், பின்னர் பாஜகவில் இணைந்து பணியாற்றியதையும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், தனது ராஜினாமா கடிதத்தில், “தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. தமிழ்நாடு குறித்த எனது பார்வையும், பாஜக மூத்த தலைவர்களின் பார்வையும் ஒன்றாக இல்லை” என்று தெரிவித்திருந்தார்.
மேலும், “பாஜகவில் இருந்தாலும் தமிழகத்தின் மொழி, கலாச்சாரம் மற்றும் உணர்வுகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை. நான் பெருமைமிகு இந்தியனும், பாரம்பரியமிக்க தமிழனும்” என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அண்ணாமலையின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் புதிய அரசியல் சக்தி உருவாகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மாறிவரும் அரசியல் சூழலில், அவரது புதிய கட்சி எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
