துணை குடியரசுத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல் நிலைக் காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்ட நிலையில், அடுத்த துணை குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புதிய துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. புதிய துணை குடியரசுத் தலைவருக்கான தேர்தல் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

மாலை 5 மணிக்கு மேல் வாக்குகள் எண்ணப்பட்டு, உடனே முடிவு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக பாஜக சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். ’இந்தியா’ கூட்டணி சார்பில் வேட்பாளர் யார் என்று இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இது குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினர். கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் பல்வேறு தலைவர்கள் இதில் கலந்து கொண்டு விவாவதம் மேற்கொண்ட நிலையில், இரவு 8 மணி வரை நீடித்த கூட்டத்தில், ஒருமித்த கருத்து ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் இது தொடர்பான அடுத்தக்கட்ட கூட்டம் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வீட்டில் மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் சார்பில் திருச்சி சிவா, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோரது பெயர்கள் அடிப்படுவதாகவும், அரசியல் பிரமுகர்களை தவிர்த்து பிற நபர்களை போட்டியில் நிறுத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் வலியுறுத்துவதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version