தனியார்மயப்படுத்தலை எதிர்த்து சென்னை மண்டல தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததே அமைச்சர் சேகர்பாபு-வுக்கு சொந்தமான அறக்கட்டளை தான் என்ற பகீர் தகவலை அதிமுக அம்பலப்படுத்தி உள்ளது.
பணிநிரந்தரம் கோரியும், தனியார் மயப்படுத்தலைக் கண்டித்து சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 2 மண்டலங்களைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் ரிப்பன் மாளிகைக்கு எதிரே அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கே.என்.நேரு, சேகர்பாபு போன்ற அமைச்சர்கள் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வந்தனர்.
இந்நிலையில் தனியார் அறக்கட்டளை ஒன்று குறிப்பிட்ட இடத்தில் போராட்டம் நடைபெறுவதால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 12-ந் தேதி இரவு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களை, போலீசார் குண்டுகட்டாக தூக்கியும், விரட்டி – விரட்டியும் கைது செய்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கின் பின்னணி குறித்த பகீர் தகவல் ஒன்றை அதிமுக தனது அதிகாரபூர்வ இணையபக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு..
தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு தொடர்ந்த தேன்மொழி யார் தெரியுமா?
திமுக சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாகி! இவர் தொடர்ந்த வழக்கில் கூறப்பட்டிருக்கும் “தனம் சாரிடபிள் டிரஸ்ட்” யாருடையது தெரியுமா?
பணி நிரந்தர வாக்குறுதியை நாங்கள் கொடுக்கவே இல்லை என பச்சை பொய் சொன்ன அமைச்சர் சேகர்பாபு உடையது …. இப்போது தெரிந்ததா தூய்மைப் பணியாளர்களை வெளியேற்றியது யார் என்று?
யாருக்கும் தொந்தரவு செய்யாமல், அமைதியாக போராடி வந்த எளிய மக்களின் மீது கரிசனம் கொள்ளாமல் வெறுப்பை உமிழ்ந்து, காட்டில் இரையை வேட்டையாடும் மனோபாவத்தோடு , நரி தந்திரம் செய்து, அவர்களை நடுஇரவில். காவல்துறையை வைத்து அடித்து வெளியேற்றியுள்ளது திமுக!
தூய்மைப் பணியாளர்களை வெறுத்து ஒதுக்கும் அளவிற்கு, அவர்களை இடையூறாக கருதிய இந்த திமுக ஆட்சியை மக்கள் குப்பையில் வீசத் தான் போகிறார்கள். அதை நீங்கள் பார்க்கத் தான் போகிறீர்கள்..
இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
