அதிமுகவிலேயே துணைப் பொதுச் செயலாளர் பதவி கேட்டவர் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா. பதவி கொடுக்காததால் தான் அவர் தவெகவில் இணைந்தார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசுக்கு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்துள்ளனர். இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புற வழியில் ஆட்சி அமைக்க முயன்றதாகத் தெரிவித்தார்.
இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், கடுமையாக மறுத்தார். “ஆதவ் அர்ஜுனா திமுக மற்றும் அதிமுகவை இணைத்து அவதூறு பரப்பி வருகிறார். அவரது அரசியல் பின்னணியைப் பார்த்தால் உண்மை புரியும்” என்று கூறினார்.
ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தொடங்கி, பின்னர் திமுகவில் இணைந்து, அதன் பிறகு அதிமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி கோரி எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், இறுதியில் தமிழக வெற்றி கழகத்தில் சேர்ந்தார் என்பதை ஓ.எஸ். மணியன் சுட்டிக்காட்டினார். “இத்தனை கட்சி மாற்றங்களுக்குப் பிறகு, தற்போது அதிமுக-திமுக இணைப்பு என்று அவதூறு செய்வது நியாயமற்றது” என்றார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். ஸ்டாலின் அரசின் இயலாமை, சட்டவிரோத நடவடிக்கைகள், மக்கள் விரோத கொள்கைகள் ஆகியவற்றை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலின்போது அனைத்து தொகுதிகளிலும் திமுகவின் தோல்விக்கான காரணங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்த எதிர்ப்புதான் திமுகவின் தோல்விக்கு முக்கிய காரணம்” என்று ஓ.எஸ். மணியன் வலியுறுத்தினார்.
எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு கொண்ட சிலரை, அதிகாரத்துக்காக குதிரைப் பேரம் நடத்தி தங்கள் பக்கம் இழுத்ததை மறைக்கவே ஆதவ் அர்ஜுனா இத்தகைய அவதூறுகளைப் பரப்பி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
