ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான இறுதிப் கட்டப் போட்டிகள் தற்பொழுது தொடங்கியுள்ள நிலையில், இன்றைய குவாலிஃபையர் 1 போட்டி குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் சாம்பியன் யார் என்பதைத் தீர்மானிக்கும் இறுதிப்போட்டிக்கான முதல் தகுதிச் சுற்று இன்று தர்மசாலாவில் உள்ள ஹெச்பிசிஏ (HPCA) மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மெகா பலப்பரீட்சையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகள் மோதவிருக்கின்றன.
இருப்பினும், தர்மசாலாவில் இன்று பலத்த மழை பெய்ய 80 சதவீத வாய்ப்பு இருப்பதாக வானிலை அறிக்கைகள் தெரிவிப்பதால், இப்போட்டி தடையின்றி நடக்குமா என்ற பெரிய கேள்விக்குறி எழுந்துள்ளது.
மழை தொடர்ந்து பெய்து, ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாக ரத்து செய்யப்பட்டால், ஐபிஎல் விதிமுறைப்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நேரடியாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறும்.
நடப்புத் தொடரின் லீக் சுற்றுகளின் முடிவில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா 14 போட்டிகளில் விளையாடி 18 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. ஆனால், குஜராத் அணியை விட சிறந்த நெட் ரன் ரேட் வைத்திருப்பதால் ஆர்சிபி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
ஐபிஎல் விதிமுறைகளின்படி குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் மற்றும் குவாலிஃபையர் 2 ஆகிய போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ கிடையாது (இறுதிப்போட்டிக்கு மட்டுமே உண்டு). இதனால், நாக்-அவுட் ஆட்டம் மழையால் ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்றின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அணிக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு அது அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் ஆர்சிபிக்கு நேரடியாக பைனல் டிக்கெட் கிடைக்கும். தோற்கும் அணிக்கு குவாலிஃபையர் 2-வில் விளையாட மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், குஜராத் அணி அந்தப் போட்டிக்குச் செல்லும்.
மழை காரணமாக 20 ஓவர்கள் கொண்ட முழுமையான ஆட்டத்தை நடத்த முடியாமல் போனால், நடுவர்கள் ஓவர்களைக் குறைத்து ஆட்டத்தை நடத்த முயல்வார்கள். அதுவும் சாத்தியமில்லாத பட்சத்தில், வெற்றியாளரைத் தீர்மானிக்க ஒரு ‘சூப்பர் ஓவர்’ மட்டும் நடத்த ஐபிஎல் விதிகளில் இடமுண்டு. சூப்பர் ஓவரும் நடத்த முடியாத அளவிற்கு மழை நீடித்தால் மட்டுமே புள்ளிப்பட்டியல் கணக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
நடப்பு சாம்பியனான ஆர்சிபி மற்றும் 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தங்களது இரண்டாவது ஐபிஎல் கோப்பையை வெல்லும் தீவிர முனைப்பில் உள்ளன. இந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய தலா இரண்டு லீக் போட்டிகளில் தலா ஒரு வெற்றியைப் பெற்று 1-1 எனச் சமநிலையில் உள்ளன. ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 8 போட்டிகளில் தலா 4 வெற்றிகளுடன் 4-4 எனச் சமபலத்துடன் விளங்குகின்றன.
தற்பொழுது தர்மசாலாவில் நிலவும் 80 சதவீத மழை அச்சுறுத்தலால் ஆர்சிபி மற்றும் குஜராத் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
