வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களைச் சேர்த்துள்ளது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று அசத்தியது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று மவுண்ட் மவுங்கனூயிலுள்ள பே ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பந்து வீச அழைத்தது. இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே – கேப்டன் டாம் லேதம் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டதுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டாம் லேதம் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 137 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் டெவான் கான்வே 178 ரன்களுடனும், ஜேக்கப் டஃபி 9 ரன்களுடனும் களத்தில் உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கீமார் ரோச் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.
