இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தனது ‘தனிப்பட்ட உரிமைகளை’ பாதுகாக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கம்பீர் பேசாத விஷயங்களை அவர் பேசியது போல சித்தரிக்கும் போலி வீடியோக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி பரப்பப்பட்ட போலி வீடியோ 29 லட்சம் பார்வைகளைப் பெற்றுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தனது முகம், பெயர் மற்றும் குரலை அனுமதியின்றி வணிக ரீதியாகவும், தவறான தகவல்களைப் பரப்பவும் பயன்படுத்திய 16 தரப்பினருக்கு எதிராக இந்த வழக்கை கம்பீர் தொடர்ந்துள்ளார். இதில் மெட்டா (Meta), எக்ஸ் (X), கூகுள் (Google) போன்ற சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் அமேசான், ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களும் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக 2.5 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட போலி வீடியோக்களை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
“எனது முகம், எனது குரல் மற்றும் எனது பெயரே எனக்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று கம்பீர் தனது மனுவில் வேதனை தெரிவித்துள்ளார். மூத்த கிரிக்கெட் வீரர்கள் குறித்து அவர் தவறாகப் பேசியது போன்ற டீப்ஃபேக் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துள்ளன. ஏற்கனவே நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அனில் கபூர் ஆகியோர் தங்களின் தனிப்பட்ட உரிமைகளைப் பாதுகாக்க இதேபோன்ற சட்டப் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், தற்போது கம்பீர் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

