தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இருந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி புறக்கணிக்கப்பட்டுள்ள சம்பவம், சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது, நவம்பர் 14 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 26 ஆம் தேதி முடிவடைய உள்ளது. அதைத்தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். அதன் பிறகு, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடைபெறவுள்ளன.
இந்நிலையில் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணியை பிசிசிஐ நேற்று அறிவித்தது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், காயத்திலிருந்து மீண்டுள்ள ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டுள்ளதுடன், துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதேசமயம் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இடம் பிடித்திருந்த தமிழக வீரர் நாராயண் ஜெகதீசன் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கருண் நாயர், அபிமன்யூ ஈஸ்வரன் உள்ளிட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
அதேசமயம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இத்தொடருக்கான இந்திய அணியிலும் தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்சமயம் 35வயதாகும் முகமது ஷமி, கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது காயத்தை சந்தித்தார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த ஷமி, கிட்டத்திட்ட இரண்டு ஆண்டுகள் எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்தார்.
ஆனால் தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய டெஸ்ட் அணியின் முகமது ஷமி தேர்வு செய்யப்படவில்லை. ஷமி காயத்தில் இருந்து மீண்டு சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் நிலையிலும், அவர் தொடர்ந்து அணியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வருவது தேர்வாளர்கள் மீதான விமர்சனங்களுக்கும் வழிவகுத்துள்ளது. இதனால் இனிவரும் காலங்களில் முகமது ஷமிக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படுமா? அல்லது சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவிப்பாரா? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.