இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. லண்டன் நகரில் லார்ட்ஸ் மைதானத்தில் இப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. முதல் இன்னிங்சில் அந்த அணி 112.3ஓவரில் 387 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 104 ரன்கள் அடித்தார். அத்தோடு இந்தியா தரப்பில் ஜஸ்பிரீத் பும்ரா 5 விக்கெட்களை எடுத்தார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 2-வது நாள் ஆட்டநேர முடிவில், 43 ஓவர்களில் 3 விக்கெட்க்கு, 145ரன்கள் அடித்திருந்தது. லோகேஷ் ராகுல் 53 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த ஆட்டத்தின் போது, கே.எல்.ராகுல் – ரிஷப் பண்ட் ஜோடி, இங்கிலாந்து பந்துவீச்சை கவனத்துடன் எதிர்கொண்டது.
சிறப்பாக விளையாடிய இந்த சோடி 141 ரன்களில் பிரிந்தது. ரிஷப் பண்ட் 74 ரன்களில் ரன் அவுட் ஆனார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் கே.எல்.ராகுலும் சதம் அடித்து அவுட்டானார். லார்ட்ஸ் மைதானத்தில் கே.எல். ராகுல் அடித்த 2-வது சதம் இதுவாகும். இதற்கு முன்னர் 2021-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போதும் தொடக்க ஆட்டக்காரராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ராகுல் சதமடித்திருந்தார்.
இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட சதங்கள் அடித்த 4-வது வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரர் என்ற மாபெரும் சாதனையை கே.எல்.ராகுல் படைத்துள்ளார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவின் பில் பிரவுன், வெஸ்ட் இண்டீசின் கோர்டன் கிரீனிட்ஜ் மற்றும் தென் ஆப்பிரிக்காவின் கிரேம் சுமித் ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.